ஜாதகத்தில் ஒரு கிரகம் நீச்சமானால் அதற்கான பலனை கணிப்பது எப்படி?
ஜோதிடத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் தலா ஒரு வீடுகள் என்று ஒதுக்கப்பட்டாலும், தாரா கிரகங்கள் என்று அழைக்கப்படக்கூடிய செவ்வாய், குரு, புதன், சுக்கிரன் மற்றும் சனி ஆகிய கிரகங்களுக்கு, இரண்டு வீடுகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும் இரண்டு வீடுகள் இருந்தாலும் ஒரு வீட்டை மட்டுமே பிரதானமாகக் கொண்டு, அந்த கிரகம் செயல்படும். அந்த வீட்டின் ஜோதிட பெயர் மூலத் திரிகோணம் என்பதாகும். ஆகவே அந்த மூலத்திரிகோண வீட்டை முன்னிறுத்தியே ஒவ்வொரு கிரகமும் அதற்கான தசா புத்தி பலன்களை ஜாதகருக்கு தந்து கொண்டிருக்கும்.
குருவிற்கு தனுசு ராசியும்,
சனிக்கு கும்ப ராசியும்,
புதனுக்கு கன்னி ராசியும்,
சுக்கிரனுக்கு துலா ராசியும்,
செவ்வாய்க்கு மேஷ ராசியும், மூலத்திரிகோண வீடாக அமைகிறது. சூரியனுக்கு சிம்ம ராசியும்,
சந்திரனுக்கு ரிஷப ராசியும் மூலத்திரிகோண வீடாக அமைகிறது.
மேற்கண்ட ஏழு கிரகங்களில் எந்த கிரகம் நீச்சம் அடைந்தாலும், அந்த கிரகத்திற்கான மூலத்திரிகோண ராசி லக்னத்திற்கு எத்தனையாவது பாவகமாக வருகிறதோ, அந்த பாவகம் சம்பந்தப்பட்ட பொருள் காரகத்துவம் அல்லது உயிர் காரகத்துவத்தில், ஒரு இழப்போ அல்லது பங்கமோ ஏற்பட்டு பின்பு அந்த பாவகம் செயல்பட தொடங்கும் அல்லது அந்த கிரகத்தின் உயிர் காரகத்துவம் அல்லது பொருள் காரகத்துவத்தில் ஜாதகருக்கு சிக்கலை கொடுத்து பின்பு பலன்களை வழங்க தொடங்கும்.
உதாரணமாக மேஷ லக்னத்தில் பிறந்த நபருக்கு சுக்கிரன் என்ற கிரகம் நீச்சமடைந்திருப்பின், அதன் மூலத்திரிகோண ராசியாக வரும் துலாம் ராசி ஏழாம் பாவகமாக வருகிறது. ஆகவே இவர்களுக்கு திருமணம் தாமதமாகவோ, காதல் தோல்வியோ, திருமணம் பாதியில் நின்றோ அல்லது முதல் திருமணம் சிக்கலில் முடிந்து இரண்டாம் திருமணம் நிலைத்திருக்கும் அல்லது வீடு மனை வாகனம் விற்ற பிறகு திருமணம் நடைபெறுவதோ அல்லது கருப்பை ரீதியான சிக்கல்களை சந்தித்த பிறகு குழந்தை பிறப்பது நடக்கும். சுக்கிரன் வீடு, மனையை, கருப்பை குறிப்பதால் இப்படி பலன் எடுக்க வேண்டும்.
Comments
Post a Comment