பலா மரம் பழுக்க......

 



ஒரு முறை எனது அன்னையைக் காணவந்த ஓர் அம்மையாரிடம், எனது அன்னையார், 'எங்கள் வீட்டுத் தோட்டத்துப் பலாமரம் பல ஆண்டுகளாகக் காய்ப்பதில்லை, பிஞ்சுகள் கருகி வீழ்கின்றன என்ன செய்யலாம் என்பது புரியவில்லை', என அங்கலாய்ந்துள்ளார். அம்மையார் 'நான் ஒரு யோசனை கூறுகிறேன், அதன்படிச் செய்தால் காய் கருகாமல் பெரிதாகிப் பழுக்கும்' என உறுதியாகக் கூறினார். 'உனது இரண்டரை வயது மகனிடம் ஒர் உலக்கை கொடுத்து (அப்பளம் குத்தும் சிறு உலக்கை) அம்மணமாக பலா மரத்திடம் சென்று அதனை உலக்கையால் ஒரு சிறு குத்து குத்தச் சொல், அடுத்த பருவம் காய்கள் பெரிதாக்கிப் பழுக்கும்' என்றார். 'யார் அம்மணமாகச் சென்று குத்தினாலும் பழுக்கும் ஆனால், நீயோ உன் வீட்டுக்காரரோ இதனைச்செய்யமாட்டீர்கள், அக்கம் பக்கத்தார் யாரேனும் கண்டுவிட்டால் மானம் போய்விடும் என்னும் தயக்கத்தால்! உன் மகன் சிறு குழந்தைதானே, நீ சொன்னால் கேட்பான், அக்கம் பக்கத்தார் கண்டாலும் குழந்தைதானே என எண்ணிக்கொள்வர்' என்றார்.


எனது தாயார் பகுத்தறிவுடன் "அதெப்படி, நீங்கள் சொல்வது பகுத்தறிவுக்கு ஏற்புடையதாக இல்லையே! மரத்திற்கு அறிவே கிடையாதே, இச்செயலால் எப்படி தனது காய்களைப் பழுக்கச்செய்யும்?" எனக் கேட்டார். அம்மையாரோ சற்றும் அசரவில்லை. 'உலகில் உள்ள எல்லாவற்றையும் 'பகுத்தறிவால் கண்டுவிட இயலாது, ஆனாலும் அனுபவத்தில் சொல்கிறேன், மரத்திற்கு அறிவுண்டு, இச்செயலால் அது நாணி, பழுக்கும், என்பதைக் கண்டுள்ளேன் என்றார்'. அம்மையார் எனக்கு உத்தரவிட்டார், நான் முரண்டு பிடித்தேன்! அவர் என்னைப் பலவாறு கெஞ்சி, ஒருவாறு மறுநாள் அதிகாலையில் யாரும் காண்பதற்கு முன் சட்டென செய்துவிட ஒப்புக்கொண்டேன்.


என்ன வியப்பு, பலா மரம் அடுத்தப் பருவத்தில் காய்த்துப் பழுத்தது! இது 'காக்கை உட்காரப் பலாப் பழமா' என்பது தெரியவில்லை, ஆனால் நிகழ்ந்தது உண்மை! அப்போது நான் 'பச்சிளம் பாலகன்' என்றாலும் 'மானப்பிரச்சினை' என்பதால் இலேசாக நினைவிலும் உள்ளது!

முயன்று பாருங்கள் மக்களே



Comments